டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டின் போது இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாஜக கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் பாஜக இளைஞரணி உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு கூடிவந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ராகுல் காந்தி உருவப்பொம்மையை எரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மறுநாள் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜக அலுவலகம் அருகே ஒன்று கூடி ஊர்வலமாக சென்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்பொம்மையை எரித்ததால் இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறி கல்வீச்சு சம்பவமும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் எஸ்பி வம்சிதரெட்டி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீசார் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அரசு ஊழியர்களின் பணியில் தடை ஏற்படுத்தல், உருவப்பொம்மை எரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள்மீதும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.














Leave a Reply