புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சின்னப்பட்டு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் திரிஷாந்த் (12), திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அவர், குளிப்பதற்காக ஹீட்டரை இயக்கியுள்ளார். அப்போது சுடுநீரைச் சோதித்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
மயக்க நிலையில் இருந்த மாணவரை பெற்றோர் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லை எனக் கூறப்பட்டதால் மாணவரை கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனியார் காரின் மூலம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் மண்ணாடிப்பட்டு–விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி–விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மண்ணாடிப்பட்டு தொகுதி எம்எல்ஏவும், உள்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஆம்புலன்ஸ் வசதி இல்லை என கூறி அனுப்பியது கடும் அலட்சியம் என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதல்வர் ரங்கசாமியுடன் பேசி மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.














Leave a Reply