தனியாா் பங்களிப்புடன் கூட்டுறவு சா்க்கரை ஆலை திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்கள் மற்றும் பாண்கோஸ் பள்ளி ஊழியா்களுக்கான நிலுவை ஊதியம், பணிக்கொடை வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, 211 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.76 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். இதில் ஓய்வு பெற்ற 105 ஊழியர்களுக்கு ரூ.2.24 கோடி நிலுவைத் தொகையும், ரூ.6.67 கோடி பணிக்கொடையும் வழங்கப்பட்டது. மேலும் பணியில் உள்ள 55 ஊழியர்களுக்கு ரூ.3.35 கோடி நிலுவை சம்பளமும், பாண்கோஸ் பள்ளியில் பணியாற்றும் 51 ஆசிரியர்களுக்கு ரூ.1.47 கோடி நிலுவை சம்பளமும் வழங்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் இயங்கி வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்ததால் 2017ஆம் ஆண்டு மூடப்பட்டதாக தெரிவித்தார். அப்போது ஆலையில் எத்தனால் தயாரிக்கலாம் என பரிந்துரைத்தபோதும் விவசாயிகள் ஏற்கவில்லை. தற்போது விவசாயிகள் எத்தனால் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், கூட்டுறவுத் துறை மூலம் தனியார் பங்களிப்புடன் ஆலையை மீண்டும் திறந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் ரூ.255 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளை அறிந்து ஆலையை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தையும் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.














Leave a Reply