PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது!

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக 5 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒப்புதலை மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் வழங்கியதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, முதல்வர் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது.

2023ஆம் ஆண்டு மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஜிரிபாம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்த வன்முறையில் சுமார் 260 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மணிப்பூர் முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங்கை புதுதில்லியில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநிலத்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் மீட்டெடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் 5,000 வீடுகள் கட்டும் திட்டத்தை மணிப்பூர் அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது.

மார்ச் 31க்குள் 10,000 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீண்டும் குடியேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.

தற்போது வரை 16,500 இடம்பெயர்ந்தோர் மீண்டும் குடியேற்றப்பட்ட நிலையில், மேலும் 5 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *