மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் சரியாக இன்று (பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதை ஒரு முக்கிய கொள்கையாக வைத்து, உள்நாட்டு உற்பத்தி திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான இறக்குமதி சார்புகளைக் குறைத்துள்ளோம். அதே நேரத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலிருந்தும் குடிமக்கள் பயனடைவதை உறுதிசெய்துள்ளோம், வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய உற்பத்தித்திறன், வீடுகள் வாங்கும் திறன் மற்றும் மக்களுக்கு உலகளாவிய சேவைகளை ஆதரிப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் சுமார் 7% வளர்ச்சி விகிதத்தை வழங்கியுள்ளன. வறுமைக் குறைப்பு மற்றும் நமது மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவியுள்ளன.” என்று கூறியுள்ளார்.
அரிதான புவி நிரந்தர காந்தங்களுக்கான (Rare Earth Permanent Magnets – REPM) திட்டம் 2025 நவம்பரில் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், “அதன் தொடர்ச்சியாக, தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சுரங்கம், பிரித்தெடுப்பது, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடங்களை’ (Dedicated Rare Earth Corridors) அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை – பெங்களூரு உள்பட 7 அதிவேக ரயில் பாதைகள்
மும்பை-புனே, ஹைதராபாத்-புனே, ஹைதராபாத்-பெங்களூரு, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி உள்ளிட்ட ஏழு அதிவேக ரயில் பாதைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2026 பட்ஜெட் உரையில், ‘ரூ.40,000 கோடி செலவில் இந்திய செமிகண்டக்டர் மிஷன் (ISM) 2.0 தொடங்கப்படுவதாக’ அறிவித்தார். இது செமிகண்டக்டர் துறையில் வளர்ச்சியை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் இந்தியாவின் செமிகண்டக்டர் திறன்களை வலுப்படுத்தியதாகவும், ISM 2.0 இப்போது உபகரணங்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்வதிலும், முழு-ஸ்டாக் சிப் வடிவமைப்பை செயல்படுத்துவதிலும், உள்நாட்டு அறிவுசார் சொத்து உருவாக்கத்திலும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய திட்டம், தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும், இந்தத் துறையில் திறமையான வல்லுநர்களுக்கான அமைப்பை உருவாக்குவதற்கும், தொழில்துறை தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
தொடர்ச்சியாக ஒன்பது பொது பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம், மொரார்ஜி தேசாயின் ’10 பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை’ அவர் நெருங்கிவிட்டார். நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய், 1959 மற்றும் 1964-க்கு இடையில் ஆறு பட்ஜெட்டுகளையும், 1967 மற்றும் 1969-க்கு இடையில் நான்கு பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார்.
இதன் பிறகு, அதிகபட்ச பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதியமைச்சர்களின் பட்டியலில் பி. சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான். நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டு பிரதமர் மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் முழுநேர நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 2024இல் என்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறை ஆட்சி அமைத்தபோது, அவர் நிதி இலாகாவைத் தக்க வைத்துக் கொண்டார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்திய பங்குச் சந்தைகளும் வழக்கம் போல இயங்குகின்றன. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் பட்ஜெட் அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்புகளின் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Leave a Reply