அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் அப்ரஹாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போர் கப்பல் தலைமையிலான போர் கப்பல் குழு, இரானுக்கு அருகிலுள்ள கடற்பகுதிக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்கா – இரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, பெரிய மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலத்தில் இரானில் நடைபெற்ற போராட்டங்கள் மீது நடந்த கடுமையான அடக்குமுறையின் பின்னணியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவும் இரானும் நேரடி மோதலுக்கு எவ்வளவு அருகில் வந்துள்ளன என்பதும் வெளிப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அந்த நிலை மிகவும் நெருக்கமாக உள்ளது.
ஒருபுறம் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி தீவிரமடைந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்கள், மறுபுறம் தனது நோக்கங்களை ரகசியமாக வைத்துள்ள அமெரிக்க அதிபர் என இரானியத் தலைவர்கள் இப்போது இருமுனை நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலை இரானில் மட்டுமல்ல, ஏற்கெனவே நிலையற்றதாக இருக்கும் முழுப் பிராந்தியத்திலும் அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் தூண்டியுள்ளது.
டந்த ஆண்டு நடந்த 12 நாள் போருக்குப் பிறகு இரான் ராணுவ ரீதியாக முன்பைவிட பலவீனமடைந்துள்ளது என்பதை டிரம்ப் அறிந்திருக்கிறார்.
அதே நேரத்தில், முழுமையான மற்றும் முடிவில்லாத போரை நடத்துவதில் அவருக்கு பெரிதாக விருப்பமில்லை என்பதையும் இரான் நன்றாகவே அறிந்துள்ளது.
அந்த பரஸ்பரப் புரிதல் ஓரளவு நிம்மதியை அளிக்கக்கூடும்.
ஆனால் அதே நேரத்தில், அது ஆபத்தான தவறான கணிப்புகளுக்கும் வழிவகுக்கலாம். இரு தரப்பும் தங்களுடைய தாக்கத்தை அதிகமாக மதிப்பிட அல்லது எதிர்தரப்பின் நோக்கங்களை தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயம் உள்ளது.
இரானை மீண்டும் அடக்குமுறைச் சுழற்சிக்குள் தள்ளாமலும், குழப்பநிலைக்குள் வீழ்த்தாமலும், வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு டிரம்புக்கு தேவையாக உள்ளது.
இரானின் தலைவர்களுக்கோ, எப்போது நடவடிக்கை எடுப்பது, அதை உலகம் எப்படி பார்க்கும் என்பது தான் மிகப் பெரிய அபாயமாக உள்ளது.
கடந்த காலங்களில் தாமதமாகவும் குறியீட்டு முறையிலான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இரானின் முந்தைய நடைமுறை, இனி போதுமானதாக இருக்காமல் போகலாம்.
சமீபத்திய பெரும் போராட்டங்களால் அமைதி குலைந்துள்ள நாட்டுக்குள் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கும், வெளியில் தனது எதிர்ப்பு ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் வேகம் அவசியம் என்று தலைவர்கள் கருதினால், அந்த பழைய முறை போதாது என அவர்கள் எண்ணக்கூடும்.
ஆனால், இரான் மிக விரைவாகப் பதிலடி கொடுத்தால், அது நிலைமையை மோசமாக்கி மற்ற நாடுகளையும் போருக்குள் இழுத்துவிடும் ஆபத்தும் உள்ளது.
இரு தரப்பிலும் அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்த மோதல் அதன் மிக ஆபத்தான கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இதில் சமநிலையைக் கவனிக்கத் தவறி எடுக்கப்படும் ஒரு தவறான முடிவு, அரசாங்கங்களை மட்டுமன்றி கோடிக்கணக்கான இரானிய மக்களையும் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் பாதிக்கும்.








Leave a Reply