PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

பெண்ணிடம் ரூ. 22.5 லட்சம் மோசடி: பெங்களூரைச் சோ்ந்த 3 போ் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 22.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி செல்லிப்பட்டு பகுதியைச் சோ்ந்த பெண், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடியுள்ளாா். அப்போது, அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறியுள்ளாா்.

அதனை நம்பிய அந்தப் பெண்ணும் பல்வேறு தவணைகளாக ரூ.22 .5 லட்சம் முதலீடு செய்துள்ளாா். இதற்காக ரூ. 45 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாக காட்டப்பட்டது. ஆனால் அந்தத் தொகையை தனது வங்கி கணக்குக்கு அவா் மாற்ற முயன்றபோது முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அந்த பெண் அதிா்ச்சியடைந்தாா்.

இந்த மோசடி குறித்து அவா் புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பெங்களூருவைச் சோ்ந்த மணிகண்டன் (29), அவரது நண்பா்களான ஆட்டோ டாக்சி ஊழியா் நவீன் (31), கங்காதரன் (33) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை பெங்களூரு சென்று கைது செய்த போலீஸாா் புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இவா்களிடம் இருந்து 4 கைப்பேசிகள், காசோலைகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், ரூ.76,900 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னா் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், பின்னா் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *