PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

திருவண்ணாமலை மாடவீதியில் நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வந்த கடைகள் அகற்றப்பட்டன.

அண்ணாமலையாரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவதால் திருவண்ணாமலை மாநகரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேரடி வீதி அதிக வர்த்தக செயல்பாடுகள் நடைபெறும் முக்கிய பகுதியாக இருப்பதால் அங்கு மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியும் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தேரடி வீதியில் ராஜகோபுரம் முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த ஹோட்டல், ஸ்வீட் ஸ்டால் மற்றும் பிற கடைகள் ஆக்கிரமிப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. திருவிழா காலங்களில் தற்காலிகமாக அகற்றப்பட்ட இந்த கடைகள் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கடைகளை இடித்து அகற்றினர். நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த கடைகள் அகற்றப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *