இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி புதிய தலைமைச் செயலராக முனைவர் சாய்குமார் ஐஏஸ்ஸை நியமனம் செய்துள்ளது. சாய் குமார் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சாய் குமார்?
ஆந்திர மாநிலத்தில் 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்தவர் சாய் குமார். இவரின் தந்தை கிருஷ்ண ராவ் ஆடிட்டிங் துறையைச் சேர்ந்தவர், தாய் குப்பம்மா பள்ளி ஆசிரியை.
தனி வாழ்க்கை
முனைவர் சாய் குமார் ஐஏஸ் எம்.ஏ., எம்.பில். படிப்பை முடித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்பையும் முடித்துள்ளார். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் புலமை வாய்ந்தவர் சாய் குமார். இவரின் மகன் செளரவ், மகள் சாஹிதி.
ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட சாய் குமார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தினந்தோறும் காலையில் ஜாகிங், சைக்கிளிங் அல்லது நீச்சல் பயிற்சியை மேற்கொள்வார்.
ஐஏஎஸ் ஆக பொறுப்புகள், பதவிகள்
தமிழ்நாடு கேடர் அதிகாரியான இவர், தற்போது தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவராக உள்ளார். 2022ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பு அளிக்கப்பட்டது.
சாய் குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பு வகித்தவர். அதேபோல டேன்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். வருவாய்த் துறை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
பெண் சிசுக் கொலைகளைத் தடுத்தவர்
இவர் தர்மபுரி ஆட்சியராக இருந்தபோது பெண் சிசுக்கொலைகள் அதிகம் நடந்து வந்தன. தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, 150 பெண் சிசுக் கொலைகளைத் தடுத்துள்ளார். சென்னை ’வார்தா’ புயலின்போது, நிலையை சிறப்பாகக் கையாண்டவர்.
சாய் குமார் ஐஏஎஸ் தனது அலுவல் வாழ்க்கையில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், முதலமைச்சரின் (எடப்பாடி பழனிசாமி) முதன்மைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், அரசுச் செயலாளர், இணை தலைமை இயக்குநர், ஆணையர், நிர்வாக இயக்குநர், மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர், கூடுதல் ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவர் தற்போது தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.














Leave a Reply